பேட்டையில் ரோட்டில் மரம் நட்டு பொதுமக்கள் போராட்டம்

பேட்டையில் ரோட்டில் மரம் நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-11-15 21:00 GMT
பேட்டை,

பேட்டையில் ரோட்டில் மரம் நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

வெளியே தெரிந்த இரும்பு குழாய்கள்

பேட்டை அரசு ஆஸ்பத்திரியின் அருகே சேரன்மாதேவி மெயின் ரோட்டில் கழிவு ஓடையின் குறுக்கே கல் பாலம் ஒன்று இருந்தது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக அந்த கல் பாலம் அகற்றப்பட்டு, ராட்சத இரும்பு குழாய்களை கொண்டு அதன் மீது மண்ணை நிரப்பி சாலை சரிசெய்யப்பட்டது.

சமீபத்தில் பெய்த மழையால் அந்த பகுதியில் மண் அரித்துச் செல்லப்பட்டு தற்போது இரும்பு குழாய்கள் வெளியே தெரிகின்றன. மேலும் 2 இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்றால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மரம் நடும் போராட்டம்


இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரோட்டை சீரமைக்கக்கோரி நேற்று காலை அந்த ரோட்டில் பள்ளம் விழுந்த இடத்தில் வேப்ப மரத்தை நட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சாலைமறியலும் செய்ய முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு திரண்டு நின்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லையில் இருந்தும், சேரன்மாதேவி, முக்கூடலில் இருந்தும் பேட்டை வழியாக செல்லக்கூடிய பஸ்கள், கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்