பள்ளிக்கூட வகுப்பறையில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை

வகுப்பறையில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-11-14 23:15 GMT
தஞ்சை,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நடுப்படுகை வாய்க்கால்தெருவை சேர்ந்த சரவணகுமார் மகன் சதீஷ்பாபு(வயது17) பிளஸ்-2 படித்து வந்தார். சதீஷ்பாபு நேற்று காலை பள்ளிக்கு வந்தார். அப்போது பள்ளி வளாகத்தில் சக மாணவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த சதீஷ்பாபு சிறிது நேரம் கழித்து தனது புத்தகப்பையுடன் வகுப்பறைக்கு சென்றார்.

அப்போது வகுப்பறையில் யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சதீஷ்பாபு பள்ளி வகுப்பறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன்பின் வகுப்புகள் தொடங்கும் நேரத்தில் சக மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர். அப்போது வகுப்பறைக்குள் சதீஷ்பாபு தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனே இது குறித்து பள்ளி தாளாளர் சரவணன், முதல்வர் தமிழ்செல்வி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே தனது மகன் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த சதீஷ்பாபுவின் தாய் அங்கேஸ்வரி பள்ளிக்கு வந்து மகன் உடலை பார்த்து கதறி அழுதார். மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளிக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் ஆகியோர் விரைந்து வந்து பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவர் சதீஷ்பாபு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு தனது வீட்டில் இருந்து கயிற்றை பையில் வைத்து பள்ளிக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. மாணவர் தற்கொலை செய்து கொண்டதால் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் வீடு திரும்பினர். சதீஷ்பாபு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சதீஷ்பாபுவின் தாய் அங்கேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சதீஷ்பாபுவின் தம்பி இதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்