உடலில் பெட்ரோல் ஊற்றி மாணவன் தற்கொலை முயற்சி மர்ம நபர்கள் கடத்தி தீ வைத்ததாக கூறியதால் பரபரப்பு

திருப்பத்தூர் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு மாணவன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளான். மர்ம நபர்கள் தன்னை கடத்தி தீ வைத்ததாக அவன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-11-14 23:15 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள ஜோன்றம்பள்ளி காந்திநகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கோவிந்தன் (வயது 14). இவன் திருப்பத்தூர் அருகே வெங்களாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

கோவிந்தன் தினமும் வீட்டில் இருந்து ஜோன்றம்பள்ளி வரை சைக்கிளில் சென்று, பின்னர் அங்கிருந்து பள்ளிக்கு பஸ்சில் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கோவிந்தன் ஜோன்றம்பள்ளியில் சைக்கிளை விடாமல், நேராக பள்ளிக்கு சென்றான். சிறிதுதூரம் சென்றதும் நேதாஜிநகர் என்ற இடத்தில் தீக்காயத்துடன் கோவிந்தன் துடித்து கொண்டிருந்தான்.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கோவிந்தனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவிந்தன் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

முன்னதாக திருப்பத்தூர் தாலுகா போலீசார் கோவிந்தனிடம் விசாரணை நடத்தியதில், ‘காரில் வந்த 2 மர்மநபர்கள் தன்னை மாந்தோப்புக்குள் தூக்கிச் சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்’ என்று கூறினான்.

சிறுவன் கோவிந்தன் கூறியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் துருவி துருவி விசாரித்ததில், கோவிந்தன் தனக்கு தானே உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு நாடகமாடியது தெரியவந்தது.

மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில், கோவிந்தன் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தான். அதன்பிறகு சில மாதமாக வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வருவதும், சில நாட்களுக்கு முன்பு உடன் படிக்கும் மாணவன் ஒருவனின் பணப்பையை கோவிந்தன் திருடியதை பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர் கோவிந்தனிடம், உன்னை விடுதியில் சேர்த்துவிடுவோம் என கூறியுள்ளனர். இதனால் வெறுப்படைந்த கோவிந்தன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்