திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பார்வையாளர்களை கவர்ந்த பணத்தாள், நாணய கண்காட்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பணத்தாள்கள் மற்றும் நாணய கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

Update: 2017-11-14 23:00 GMT
திருச்சி,

தேசிய நூலக வாரவிழா திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதில் மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட மைய நூலக வளாகத்தில் பழங்கால நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் கண்காட்சி நடந்தது.

நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இங்கிலாந்து ராணி விக்டோரியா உருவம் பொறித்த ஓரணா, அரையணா, காலணா நாணயங்கள், பழங்கால ரூபாய் நோட்டுகள் இடம் பெற்று இருந்தன. இது தவிர அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பழங்கால பணத்தாள்களும் இடம் பெற்றன. தஞ்சை பெரியகோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி கடந்த 2010 - ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட ரூ.1000 நாணயம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

தமிழ் எழுத்தில் பணத்தாள்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்த ரூ.50 ஆயிரம் கோடிக்கான பணத்தாளும் (பிப்டி டிரில்லியன் டாலர்) கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது. இலங்கை, மியான்மர், சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளின் பணத்தாள்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. ஆனால் மொரீசியஸ் நாட்டில் உள்ள ஒரு பணத்தாளில் தமிழ் எழுத்துக்களை எண்ணாக கொண்டு ரூ.10 மதிப்பில் அச்சிடப்பட்டதும் வைக்கப்பட்டு இருந்தது.

நூலகத்திற்கு புத்தகங்கள் படிப்பதற்காக வந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் இந்த கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர். 

மேலும் செய்திகள்