ஊத்தங்கரை பாம்பாறு அணை அருகே புதிய தரைப்பாலத்தில் விரிசல்; குழாய்கள் உடைந்து சேதம்

ஊத்தங்கரை பாம்பாறு அணை அருகே புதிய தரைப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், சிமெண்டு குழாய் உடைந்து சேதம் அடைந்தது.

Update: 2017-11-14 23:00 GMT
ஊத்தங்கரை,

ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணை அருகே ஆற்றின் குறுக்கே கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேம்பாலம் உள்ளது. திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாலம் கர்நாடகா, புதுச்சேரிக்கு செல்லும் பிரதான பாதை ஆகும். இந்த பாலம் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்தன.

பழமையான இந்த பாலம் வலுவிழந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி சென்றன. பழைய மேம்பாலத்தின் விரிசல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாம்பாறு அணை உபரிநீர் தரைப்பாலம் வழியாக வாகனங்கள் செல்லும் வகையில் சிமெண்டு உருளை குழாய்கள் அமைக்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறத்திலும் கருங்கற்கள் தடுப்பும் அமைக்கப்பட்டு அந்த தரைப்பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது.

குழாய்கள் உடைந்து சேதம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாம்பாறு அணை மதகுகளின் வழியாக வெளியேறும் உபரி நீர்வரத்தால் இந்த தரைப்பாலத்தில் இருந்த சிமெண்டு உருளை குழாய்கள் அடித்து செல்லப்பட்டதுடன், உடைந்து சேதம் அடைந்தன. மேலும் தடுப்புக்காக போடப்பட்டு இருந்த கருங்கற்களும் பெயர்ந்தது. தார்சாலையின் இருபுறங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தரைப்பால சாலையும் சேதம் அடைந்துள்ளது. இந்த சேதத்தை தொடர்ந்து, தரைப்பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பழைய மேம்பாலம் வழியாகவே வாகனங்கள் சென்று வருகிறது. கட்டி முடிக்கப்பட்டு 2 மாதங்களுக்குள்ளேயே தரைப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

ஏற்கனவே வலுவிழந்த மேம்பாலம் வழியாக தற்போது வாகனங்கள் சென்று வருகிறது. பாம்பாறு அணை நிரம்பி வழிகிறது. உபரிநீர் திறக்கப்பட்டால் தற்போது விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ள தரைப்பாலம் முற்றிலுமாக அடித்து செல்லப்படும் நிலை ஏற்படும். கட்டி முடிக்கப்பட்ட இரண்டே மாதங்களில் தரைப்பாலம் சேதம் அடைந்தது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி பாலம் கட்டும் பணியில் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்