ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்காணிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்காணிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் மத்திய அரசு மனு.

Update: 2017-11-14 23:00 GMT

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

இந்தியா முழுவதும் கடந்த ஜூலை 1–ந்தேதி அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை பயன்படுத்தி வியாபாரிகள் அரசுகளை ஏமாற்றலாம். குறிப்பாக, ஓட்டல்களில் ஜி.எஸ்.டி. வரி வசூலில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்த வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் போக வாய்ப்புகள் உள்ளன.

இதை தடுக்கும்வகையில் ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமான வர்த்தகங்களுக்கு ஆன்லைன் ரசீது வழங்குவதை கட்டாயப்படுத்தவும், எஸ்.எம்.எஸ். மூலம் ஆன்லைன் ரசீது பெறவும், ஆன்லைன் ரசீதில் பொருட்களை விற்றவர், வாங்கியவரின் விவரங்கள் இடம் பெறவும், சரக்கு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் ரசீது வழங்குவதை கண்காணிக்க மாநில, மாவட்ட, மண்டல அளவில் பறக்கும் படை அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜி.எஸ்.டி. வரியை தாக்கல் செய்ய 2 விதமான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை தாக்கல் செய்வதற்கான காலமும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களது விண்ணப்பங்களை தாக்கல் செய்த பின்னர் தான் அதில் உள்ள குறைகள், குளறுபடிகள் என்னென்ன என்பது தெரியவரும். ஆனால் மனுதாரர் முன்னதாகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை டிசம்பர் 12–ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்