திட்டக்குடி பகுதியில் தொடர் வழிப்பறி: கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 3 பேர் கைது
திட்டக்குடி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
விருத்தாசலம்,
திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, நெய்வேலி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது. இந்த கும்பலை பிடிக்க, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் டெல்டா பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசாரும் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 21) மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 6 பேரை கடந்த 11–ந் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10¾ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திட்டக்குடி, ராமநத்தம், பெண்ணாடம் பகுதியில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டதும், இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனாக வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்கிற ஆணி சங்கர்(28) என்பவர் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சங்கரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் தனிப்படை போலீசார் வாகையூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் முன்னுப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திட்டக்குடி பகுதியில் நடந்த தொடர் வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சங்கர் என்பதும், ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்ததும், இவருடைய கூட்டாளிகளான புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த ரவிக்குமார் என்கிற தொப்பை ரவி(19), பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த கவுதமன்(19) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சங்கர் உள்பட 3 பேரையும் ராமநத்தம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 50 பவுன் நகைகள், 4 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்கள், கத்தி ஆகியவை மீட்கப்பட்டன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் சென்று, கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் நகைகளை பறிகொடுத்த பெண்களிடமும் விசாரித்தார். பின்னர் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசாரை பாராட்டினார்.