சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

சிவகங்கையை அடுத்த சி.பி.காலனி பகுதியில் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் துப்புரவு பணி செய்து கழிவுநீரை அகற்றினார்.

Update: 2017-11-14 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை சி.பி. காலனி பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து வெளிவரும் கழிவுநீர் சாலை நடுவே தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வந்ததுடன், கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கழிவுநீரால் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது என்றும், இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன என்றும் அப்பகுதி மக்கள் கூறி வந்தனர். இந்தநிலையில் சி.பி.காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கோரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தும், கழிவுநீரை அகற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் சிவகங்கை–திருப்பத்தூர் சாலையில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இருப்பினும் கழிவுநீர் அகற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மக்கள் மத்தியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், மண்வெட்டியை எடுத்து தேங்கி கிடந்த தண்ணீரை வெட்டி வெளியேற்றினார். பின்னர் அங்கு வந்த ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, சி.பி.காலனி பகுதியில் தேங்கிய கழிவுநீர் முழுவதுமாக அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்