கோவில்பட்டியில் 2–வது நாளாக விவசாயிகள் வாயில் கருப்புத்துணி கட்டி பிச்சை எடுக்கும் போராட்டம்

பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் 2–வது நாளாக விவசாயிகள் வாயில் கருப்புத்துணி கட்டி கைகளை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-14 21:30 GMT

கோவில்பட்டி,

பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் 2–வது நாளாக விவசாயிகள் வாயில் கருப்புத்துணி கட்டி கைகளை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர் காப்பீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2015–2016–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை ரூ.29½ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் விளாத்திகுளம் தாலுகாவில் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு பெருமளவு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. ஆனால் கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்களில் மானாவாரி நிலங்களில் பயிரிட்ட விவசாயிகளுக்கு முறையாக பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

வாயில் கருப்புத்துணி கட்டி...

எனவே பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மண்சட்டி ஏந்தி, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, 2–வது நாளாக நேற்று காலையில் பாரதீய கிசான் சங்கத்தினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களது வாயில் கருப்புத்துணி கட்டியவாறு, உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்டியிட்டு, கைகளை ஏந்தி பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை மனு

சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேசு நாயக்கர், துணை தலைவர் பரமேசுவரன், இயற்கை விவசாய சங்க தலைவர் கருப்பசாமி, ஒன்றிய தலைவர் ஜெயராமன், செயலாளர் கிருஷ்ணசாமி, துணை தலைவர் நல்லையா, மகளிர் அணி தலைவி கிருஷ்ணம்மாள் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், உதவி கலெக்டர் அனிதா அலுவலக பணிக்காக வெளியே சென்று இருந்தார். எனவே உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்