பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: அரசு வேலை கேட்டு கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுத பெண்

சேலத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு வேலை கேட்டு கலெக்டர் ரோகிணி காலில் விழுந்து பெண் ஒருவர் கதறி அழுதார்.

Update: 2017-11-13 23:26 GMT
சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் அவர் கோரிக்கைகள் தொடர்பாக 385 மனுக்களை பொதுமக்களிடம் வாங்கினார். இதை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் 5 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

முன்னதாக தரைதளத்தில் கலெக்டர் ரோகிணி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை வாங்கினார். அப்போது காடையாம்பட்டி ரெட்டியூரை சேர்ந்த சிவன் என்பவருடைய மனைவி தாமரைசெல்வி (வயது 35), திடீரென தனது கைகுழந்தையுடன் கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுதார். பின்னர் அவர் கலெக்டரிடம் கூறுகையில், எனது கணவர் மாற்றுத்திறனாளி என்பதால் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த பணம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை. எனவே தனக்கு ஏதாவது அரசு வேலை கொடுத்தால் குடும்பத்தை நடத்த நன்றாக இருக்கும், என்றார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் கலெக்டர் பதில் அளித்தார்.

சேலம் பொன்னம்மாபேட்டை ரெயில்வே லைன் வடக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் வீடுகளுக்கு மின்இணைப்பு மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மின்வசதி இல்லாததால் மாணவர்கள் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. இயற்கை உபாதை கழிப்பதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அங்கு ரெயில்வே போலீசாரும் அபராதம் விதிக்கிறார்கள். மேலும் ஆபத்தான நிலையில் தண்டவாளத்தை கடந்து வரவேண்டியுள்ளது, என கூறியுள்ளனர். சர்க்கார்கொல்லப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் கொடுத்த மனுவில், நான் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வீட்டை அடமானம் வைத்து பணம் பெற்றேன். இதையடுத்து வாங்கிய கடனுக்கு கந்து வட்டியாக என்னுடைய வீட்டை அந்த நபர் எழுதி வாங்கி கொண்டார். இதற்கு மேலும் சிலர் உடந்தையாக இருந்தனர். இது தொடர்பாக இரும்பாலை போலீஸ்நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, என கூறி உள்ளார்.

ஓமலூர் எம்.செட்டிப்பட்டி அருகே உள்ள தெற்குகாட்டுவளவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 1,200 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எம்.செட்டிப்பட்டிக்கு செல்லவேண்டி உள்ளது. எனவே பெருமாள்கோவில் சந்தையில் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்