காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2017-11-13 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். வாங்கல் குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:-

காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள எங்கள் கிராமம் விவசாயத்தையே நம்பி உள்ளது. இதுநாள் வரை மணல் அள்ளப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விட்டது. காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருந்ததால் மகிழ்ச்சியில் இருந்தோம். இனியாவது விவசாயத்திற்கு செழுமை கிடைக்கும் என்று நம்பினோம்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் இரவு 8 மணிக்கு மேல் அதிகாலை வரை மாட்டு வண்டி மூலம் மணலை அள்ளி கரைக்கு கொண்டு வந்து தினமும் ஒரு இடத்தில் நிறுத்தி அதனை லாரிக்கு மாற்றி கொள்ளையடித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 30 முதல் 50 மணல் லாரி எங்களது பகுதியில் இருந்து செல்கிறது. இதனால் கனிம வளம் சுரண்டப்படுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து விவசாயம் அழிந்துவிட வழிவகையாகிறது. ஊர் பொதுமக்கள் சார்பில் தடுக்க முயற்சி செய்தபோது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுத்து சம்பந்தபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

ஆதித்தமிழர் பேரவையினர் கொடுத்த மனுவில், ஏமூர் ஊராட்சி நடுப்பாளையத்தில் தெருவிளக்குகளை எரிய வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செல்லராசாமணி தலைமையில் லாரி உரிமையாளர்கள் கொடுத்த மனுவில், “சோமூர் தெற்கு படுகை, திருமுக்கூடலூர், புதுப்பாளையம், மரவாப்பாளையம், நெரூர், சேனைப்பாடி, வாங்கல், நன்னியூர், செவந்திபாளையம், கடம்பன்குறிச்சி, தளவாப்பாளையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுகிறது.

மணல் தொழிலில் முழு நேரம் ஈடுபட்டுள்ள மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களை சேர்ந்த லாரிகள் ஒரு லோடு மணல் எடுப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்து 30 நாட்களுக்கு மேல் காத்திருக்கிறார்கள். ஆற்றங்கரையோரம் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்து திருட்டு மணலை எடுத்து செல்லும் லாரிகளின் உரிமத்தை ரத்து செய்தும், டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டை தடுக்க வேண்டும்” என கூறியிருந்தனர். ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

குப்புச்சிப்பாளையம், கருப்பம்பாளையம், கிராயூர், ஒத்தக்கடை, பெரியகாளிப்பாளையம், சின்ன காளிப்பாளையம், புல்லாகவுண்டன்புதூர், வேடிச்சிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், “பாப்புலர் முதலியார் வாய்க்கால் புகளூர் வாய்க்காலில் தோட்டக்குறிச்சியில் இருந்து பிரிந்து கருப்பம்பாளையம் வரை செல்கிறது. கடைமடையான கருப்பம்பாளையத்தில் இருந்து கிளை வாய்க்கால் பிரிந்து குப்புச்சிபாளையம், கிராயூர், ஒத்தக்கடை, பெரியகாளிப்பாளையம் வழியாக வேடிச்சிபாளையம் வரை சென்று நெரூர் வாய்க்காலில் முடிவடைகிறது. இந்த நிலையில் வாய்க்காலில் ஆக்கிரமிப்பும், புதர் மண்டியும் காணப்படுகிறது. பாப்புலர் முதலியார் வாய்க்காலை தூர்வாரி பாசனத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்” என கூறியிருந்தனர்.

இந்து முன்னணி சார்பில் அளித்த மனுவில், கரூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

மாயனூர் பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் சார்பில் கொடுத்த மனுவில், காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள கோர்ட்டு அனுமதி பெற்றிருப்பதாகவும், மணல் அள்ள அனுமதிக்க கோரியும் மனு கொடுத்தனர். 

மேலும் செய்திகள்