உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்

பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மண்சட்டி ஏந்தி விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-11-13 22:45 GMT
கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2015-2016-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை ரூ.29½ கோடி ஒதுக் கப்பட்டது. இதில் விளாத்திகுளம், புதூர் பிர்கா பகுதிகளில் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. ஆனால் கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் ஆகிய 6 பிர்கா பகுதிகளில் மானாவாரி நிலங்களில் பயிரிட்ட விவசாயிகளுக்கு முறையாக பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

எனவே பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலையில் தங்களது கைகளில் மண் சட்டி ஏந்தியவாறு, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுட்டனர். பின்னர், அந்த அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில், மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் காளிராஜ், மாவட்ட தலைவர் ஜெயகண்ணன், மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட அவை தலைவர் வெங்கடசாமி, மகளிர் அணி பாப்பா, தாலுகா செயலாளர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு முறையாக பயிர் காப்பீட்டு தொகை வழங்காத வேளாண்மை துறை, வருவாய் துறை, புள்ளியியல் துறையினர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு வருகிற 20-ந்தேதிக்குள் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். இல்லையெனில் வருகிற 22-ந்தேதி தூத்துக்குடியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் அரசு விழாவில் எதிர்ப்பை தெரிவிப்போம், என்று தெரிவித்தனர்.

முற்றுகையிட்டவர்களிடம் கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க, குழு அமைத்து ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாலையில் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்