ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப கிராம நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் கிடையாது
ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப கிராம நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் கிடையாது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தொண்டி பகுதியில் உள்ள கடற்கரை புறம்போக்கில் 2 சென்ட் இடத்தில் நண்டு, மீன் போன்றவைகளை வியாபாரம் செய்து வருகிறேன்.
இந்த இடத்திற்கு மின் இணைப்பு பெற்று சொத்து வரியும் செலுத்தி வருகிறேன். இந்த பகுதியில் இதே போல் பலரும் தொழில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் என்னுடைய கடை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் தொண்டி கிராம நிர்வாக அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் கிடையாது. எனவே அவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், ‘‘ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு கையெழுத்து போட்டு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் தாசில்தார், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தான் உண்டு. தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905–ன்படி கிராம நிர்வாக அதிகாரிக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்கிறோம். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.