குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் ஓராண்டு சிறை-ரூ.50 ஆயிரம் அபராதம்

குழந்தை தொழிலாளர் களை வேலைக்கு அமர்த்தினால் ஓராண்டு சிறை தண்டனையுடன், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா தெரிவித்து உள்ளார்.

Update: 2017-11-12 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் தின வார விழாவினை முன்னிட்டு சைல்டு லைன் 1098 வாயிலாக நவம்பர் 13-ந் தேதி முதல் 19 வரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நவம்பர் 14, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான உரிமைகளான வாழும் உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு பெறும் உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை ஆகியவற்றை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகளான குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு இருத்தல் வேண்டும்.

ஆணுக்கு 21 வயது மற்றும் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகாதவர்களுக்கு திருமணம் செய்தால், குழந்தை திருமணமாக கருதப்படும். அவ்வாறு குழந்தை திருமணம் செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். மேலும், குற்றமிழைத்த நபர்களின் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி வழக்கு பதிந்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனைகள் வழங்கவும் வழிவகை உள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தை குழந்தை திருமணம் இல்லா மாவட்டமாக உருவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள், அவர்களை கல்வி கற்க அனுப்ப வேண்டும். கல்வி பெறுவது குழந்தைகளின் உரிமையாகும். எனவே, குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றம். அக்குற்றத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் பற்றி பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டுமெனவும், அவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும் எனவும், குழந்தைகளுக்கான பிரச்சினை இருந்தால் 24 மணி நேரமும் குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்