நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.659 கோடி ஒதுக்கீடு அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க கடந்த 8 மாதங்களில் ரூ.659 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வாழப்பாடியில் நடைபெற்ற புதிய கோர்ட்டு திறப்பு விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Update: 2017-11-12 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பி.கலையரசன், ஆர்.சுப்பிரமணியன், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கோர்ட்டு மற்றும் அலுவலக அறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முன்னதாக விழாவின் தொடக்கமாக அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், காமராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா, மனோன்மணி, மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

வாழப்பாடியில் புதிதாக மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் நடைபெறும் அரசு தற்போது நிறைவேற்றி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 48 நீதிமன்றங்கள் உள்ளன. இதில் 47 நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. மீதியுள்ள ஒரு நீதிமன்றம் மட்டும் வாடகை கட்டிடத்தில் உள்ளது. அந்த நீதிமன்றத்திற்கும் சொந்த கட்டிடம் விரைவில் கட்டப்படும்.

நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும் தேவையான அனைத்து இடங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி நீதிமன்றங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்து வந்தார். அதன்படி நீதி நிர்வாகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றவுடன் கடந்த 8 மாதங்களில் நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.659 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரலாற்று சாதனையாகும். இதுதவிர, 8 மாத காலங்களில் 195 புதிய நீதிமன்றங்கள் ரூ.97.91 கோடி செலவில் உருவாக்குவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.

நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ரூ.40 கோடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். நீதிமன்றம் இல்லாத தாலுகாவில் புதிதாக நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ரோகிணி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் பரமசிவம், வாழப்பாடி வக்கீல்கள் சங்க தலைவர் சரவணன், செயலாளர் திரவியம், பொருளாளர் சண்முகநாதன், சேலம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, செயலாளர் அய்யப்பமணி உள்பட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவஞானம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்