‘இரட்டை இலை சின்னத்தை உறுதியாக பெறுவோம்’ எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்

‘இரட்டை இலை சின்னத்தை உறுதியாக பெறுவோம்‘. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று நெல்லையில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

Update: 2017-11-12 23:00 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தை என்னால் மறக்க முடியாது. எனது கல்லூரி படிப்பை இந்த மாவட்டத்தில்தான் தொடங்கினேன். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் எம்.ஜி.ஆர். உதவியுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். அதன்பின்னர் என்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கியது.

எம்.ஜி.ஆர். என்னை பாராளுமன்ற உறுப்பினராக்கினார். பின்னர் அவர் பாராளுமன்ற துணை சபாநாயகராக்கி அழகுபார்த்தார். அதன்பிறகு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் அரசியல் பயணத்தை தொடங்கினேன். அவர் என்னை அமைச்சராக்கினார். தொடர்ந்து அவர் மீண்டும் என்னை துணை சபாநாயகராக்கினார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்ததில் நானும் ஒருவன். இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது. அ.தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

பின்னர் சூழ்நிலை மாறியது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஒரு இணக்கமான உறவு வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தமிழக அரசு ஜி.எஸ்.டி. வரிக்கு ஆதரவு தெரிவித்தது.

ஜெயலலிதா வகுத்து கொடுத்த கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதன் அடிப்படையில்தான் இந்த ஆட்சி நடந்து வருகிறது. வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தை உறுதியாக பெறுவோம். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்யும். எதிர்க்கட்சிகள் சதி செய்து, ஆட்சியை அகற்றி விடலாம் என நினைக்கிறார்கள். அவர்களின் கனவு பலிக்காது. அ.தி.மு.க. என்ற இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அந்த இயக்கத்தை வழி நடத்தியவர் ஜெயலலிதா. அவருடைய உழைப்பால் இந்த இயக்கம் வளர்ந்தது. தற்போது அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க. என்ற இயக்கம் தொடர்ந்து ஆட்சி செய்யும். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி பேசும்போது, “எம்.ஜி.ஆர். தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். அவர் ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை செயல்படுத்தினார். தமிழ் மக்களுக்காக உலக தமிழ் மாநாட்டை நடத்தினார். அவருடைய ஆட்சி காலத்தில் தமிழ் அறிஞர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் மதிப்பு கொடுக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அ.தி.மு.க. என்ற இயக்கம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. அந்த இயக்கத்தை ஜெயலலிதா தொடர்ந்து வழி நடத்தினார். அவர் உழைத்து உருவாக்கிய ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஜெயலலிதாவின் கொள்கைகளை பின்பற்றி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். ஜெயலலிதா உருவாக்கிய இந்த ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது“ என்றார். 

மேலும் செய்திகள்