நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்துக்கு தூண்கள் நிறுவும் பணி தொடங்கியது

நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்துக்கு தூண்கள் நிறுவும் பணி தொடங்கியது.

Update: 2017-11-12 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தின் பெரிய நகரமாக நாகர்கோவிலும், அதற்கு அடுத்தபடியாக மார்த்தாண்டம் நகரமும் இருந்து வருகின்றன. இந்த இரு நகரங்களிலும் தீராத பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் பார்வதிபுரத்திலும், மார்த்தாண்டத்திலும் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி மார்த்தாண்டம் நகரத்திலும், நாகர்கோவில் பார்வதிபுரத்திலும் இரும்பு மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.128 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வரும் மேம்பாலப்பணி ‘ஒய்‘ வடிவில் அமைய இருக்கிறது. எனவே இந்த பாலத்தின் ஒரு பகுதி நாகர்கோவில் கே.பி.ரோட்டில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி அருகிலும், மற்றொரு பகுதி பார்வதிபுரத்தில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகாமையிலும் முடிவடையும் வகையில் பாலப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்த பாலத்துக்கான அடித்தள பணிகள் நிறைவடைந்து, தூண்கள் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பிரத்யேகமாக புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரும்புத் தூண்கள் மற்றும் பாலத்தின் மேல்தளப்பகுதிகள் தயார் செய்யப்படுகின்றன. பின்னர் அவை அங்கிருந்து பெரிய, பெரிய லாரிகளில் ஏற்றப்பட்டு, நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த பாலத்தில் 70–க்கும் மேற்பட்ட இரும்புத் தூண்கள் அமைய இருக்கின்றன. அவற்றில் இதுவரை 2 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும், தொடர்ந்து இரும்புத்தூண்கள் நிறுவும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்தப்பணி நிறைவடைந்ததும் அதன்மேல் தளப்பணிகள் தொடங்க இருக்கின்றன எனவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் தனசேகர் கூறினார்.

வருகிற 2018–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்த பாலப்பணி நிறைவடையும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதற்குள் பாலப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்