பயிர் காப்பீடு செய்ய வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மறுப்பு; விவசாயிகள் அலைக்கழிப்பு
திருவாடானை தாலுகாவில் பயிர் காப்பீடு செய்ய பிரீமிய தொகை வாங்குவதற்கு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மறுப்பு தெரிவிப்பதால் விவசாயிகள் அலைக்கழிப்பு செய்யப்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை தாலுகா திகழ்ந்து வருகிறது. இத்தாலுகாவில் சராசரியாக ஆண்டுதோறும் சுமார் 45,000 எக்டேர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் நெல் சாகுபடி நடைபெற்று விவசாய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் இந்த தாலுகாவில் போதிய மழை பெய்யவில்லை. இந்த ஆண்டுக்கு பயிர் காப்பீடு செய்ய அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடம் வாங்க மறுத்து வருவதாகவும், இதுநாள் வரை பயிர் காப்பீடு பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாடானை தாலுகா துணை செயலாளர் நாகநாதன் கூறியதாவது:– கடந்த ஆண்டு திருவாடானை தாலுகாவில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியத்தை சரியான காலத்தில் செலுத்தியும் அதிகாரிகளின் பல்வேறு வகையான தவறுகளால் இன்னும் பயிர் இழப்பீட்டு தொகைக்காக தொடர்ச்சியாக விவசாயிகள் போராடி வருகிறோம். இந்த நிலையில் வருகிற 30–ந்தேதி பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கூட்டுறவு வங்கிகளுக்கு சென்றால் அங்கு பதிவு செய்ய மறுத்து வருகின்றனர். இதேபோல இப்பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர் காப்பீடு செய்ய மறுக்கின்றனர். இதுபற்றி கேட்டால் பழைய அடங்கல் வேண்டும் என கூறுகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்களிடம் போய் அடங்கல் கேட்டால் அவர்கள் அப்படி தரமுடியாது என கூறுகின்றனர்.
கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் விவசாயிகள் புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என கூறுகின்றனர். அந்த வங்கிக்கு சென்று வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் அவர்களோ இப்போது முடியாது, ஜனவரிக்கு பின்னர் தான் கணக்கு தொடங்க முடியும் என கூறுகின்றனர். இப்படியே விவசாயிகள் தினமும் கூட்டுறவு சங்கம், மத்திய கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும், கிராம நிர்வாக அலுவலர்களை சந்திக்கவும் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதோடு வீண் அலைக்கழிப்பிற்கும் அவதிக்கும் ஆளாகி உள்ளனர். பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் இதுகுறித்து அரசும், மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் உத்தரவுகளை இதுவரை பிறபிக்கவில்லை.
மாவட்ட கலெக்டர் பயிர் காப்பீடு ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். ஆனால் ஆன்லைன் மூலம் பயிர் காப்பீடு பிரீமியம் பெற்றுகொள்ளும் நிறுவனம் எது என்பதும், அந்த கம்பெனியின் கிளைகள் எங்கு உள்ளது என்பது போன்ற பல சந்தேகங்கள் விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக அனைத்து விவசாயிகளும் தேவையற்ற ஆவணங்கள் இன்றி எளியமுறையில் பயிர் காப்பீடு செய்வதற்கு அனைத்து கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் போன்றவற்றில் பிரீமியத்தை செலுத்த உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். மேலும் அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த சிறப்பு கூடுதல் கவுண்ட்டர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.