புழல் அருகே லாரி மீது மாநகர பஸ் மோதல் டிரைவர்கள் காயம்
புழல் அருகே வேகமாக சென்ற மாநகர பஸ் லாரி மீது பயங்கரமாக மோதல் டிரைவர்கள் காயம் அடைந்தனர்.
செங்குன்றம்,
சென்னை ஐகோர்ட்டில் இருந்து செங்குன்றத்தை அடுத்த காரனோடை நோக்கி நேற்று மாநகர பஸ்(தடம் எண் 57எப்) வந்து கொண்டிருந்தது. பஸ்சை சோழவரத்தை அடுத்த ஞாயிறுகிராமம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த டிரைவர் குமார்(வயது 55) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக திருவண்ணாமலை செல்லமேரி தெருவைச் சேர்ந்த ஜெயராமன்(46) பணியில் இருந்தார். பஸ்சில் 30–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
புழல் காவாங்கரை ஜி.என்.டி. சாலையில் வேகமாக சென்ற மாநகர பஸ், முன்னால் மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் மாநகர பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியதுடன், முன்பகுதியும் சேதம் அடைந்தது.
இதில் மாநகர பஸ் டிரைவர் குமாரும், லாரி டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்த மாஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன்(40) என்பவரும் காயம் அடைந்தனர். அங்குள்ள மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்றனர்.
நல்லவேளையாக பஸ்சில் இருந்த 30–க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.