காருக்குள் தாய், குழந்தையை வைத்து இழுத்து சென்றதால் பரபரப்பு போக்குவரத்து போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
மும்பை மலாடில் காருக்குள் தாயையும், குழந்தையும் வைத்து போலீசார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பை மலாடில் காருக்குள் தாயையும், குழந்தையும் வைத்து போலீசார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
‘நோ பார்க்கிங்’மும்பை மலாடு எஸ்.வி.சாலையில் நேற்று முன்தினம் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காரின் பின் இருக்கையில் பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அவரது கணவர் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார்.
அது ‘நோ பார்க்கிங்’ பகுதி என்பதால், அங்கு வந்த போக்குவரத்து போலீசார் அந்த காரை தங்களது வேனுடன் இணைத்து இழுத்துச் சென்றனர். இதையறிந்த அந்த பெண், கத்திக்கூச்சலிட்டார். இதைத்தொடர்ந்து, வேன் நிறுத்தப்பட்டு, அந்த பெண்ணும், குழந்தையும் கீழே இறக்கப்பட்டனர்.
பின்னர், அவர்கள் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். ‘நோ பார்க்கிங்’கில் காரை நிறுத்தியதற்காக அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
பணி இடைநீக்கம்இதனிடையே, இந்த காட்சியை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர், விழி பிதுங்கி நின்றனர். ஒரு சிலர் போலீசாரின் அடாவடித்தனத்தை செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதனால், இந்த பிரச்சினை பெரும் புயலை கிளப்பியது.
இதனை மிகவும் தீவிரமாக கருதிய போலீஸ் இணை கமிஷனர் (போக்குவரத்து) அமிதேஷ் குமார், தாயையும், குழந்தையும் காரில் வைத்து இழுத்து சென்ற போக்குவரத்து போலீஸ்காரர் சாசங்க் ரானேயை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.