மிடாஸ் மதுபான ஆலையில் 3–வது நாளாக சோதனை மேலாளரிடம் கிடுக்குப்பிடி விசாரணை

மிடாஸ் மதுபான ஆலையில் 3–வது நாளாக சோதனை நடந்தது. அப்போது மேலாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.

Update: 2017-11-11 23:00 GMT

வண்டலூர்,

அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமானவரி துறையினர் அதிரடியாக சோதனையிட்டனர். காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே சிறுமாத்தூர் கிராமத்தில் மிடாஸ் கோல்டன் டிஸ்டலரீஸ் என்ற மதுபான ஆலை இயங்கி வருகிறது. இங்கு தயாராகும் மதுவகைகள் டாஸ்மார்க் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த விழாயக்கிழமை காலை 6 மணி அளவில் 3 தனியார் வாடகை காரில் 14 வருமானத்துறை அதிகாரிகள் மதுபான ஆலைக்கு வந்தனர். அங்கு உள்ள அலுவலகங்களில் அவர்கள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது பணிக்கு வந்த ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அன்று இரவு 11 மணி வரை சோதனை நடந்தது. அப்போது மது பான ஆலை பதிவு அலுவலகத்தில் இருந்த ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆம்புலன்ஸ்ம் மூலம் மதுபான ஆலை அலுவலகத்தில் கொண்டு வந்து அறையில் வைத்து சீல் வைத்துவிட்டு முதல் நாள் சோதனையை இரவு 11 மணி அளவில் தற்காலிகமாக முடித்துக்கொண்டு ஆலையை விட்டு வெளியே சென்றனர்.

நேற்று முன்தினம் காலை 10.45 மணிக்கு வருமானவரி துறை அதிகாரிகள் 14 பேர் கொண்ட குழுவினர் மதுபான ஆலைக்குள் சென்றனர். வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து அதில் இருந்த ஏராளமான ஆவணங்களை துல்லியமாக ஆய்வு செய்தனர். இடை இடையே அதிகாரிகள் மதுபான ஆலையில் இருந்து காரில் வெளியே சென்று, பின்னர் வேறு ஒரு காரில் சில நபர்களை ஆலைக்கு அழைத்து வந்து அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை அடிப்படையில் மதுபான ஆலை நிர்வாக மேலாளரிடம் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை செய்த போது முக்கிய தகவல்கள் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 2 காரில் வெளியே வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மதுபாட்டில்கள், மற்றும் அட்டை பெட்டிகள் மிடாஸ் ஆலைக்கு வினியோகம் செய்யும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், மற்றும் ஸ்ரீ சாய் கார்டன்ஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலத்திற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு இருந்த ஸ்ரீசாய் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் வருமானவரி துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தது. மேலும் பணவர்த்தனைக்கு உரிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

மதுபான ஆலை, ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு 3 மணி வரை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிலும், விசாரணையிலும் ஈடுப்பட்டனர். அதன் பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியே சென்றனர்.

3–வது நாளாக நேற்று வருமானவரி துறை உதவி இயக்குனர் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினர் மதுபான ஆலைக்கு சென்று ஆவணங்களை மறுபடியும் சோதனை செய்தனர். அங்குள்ள மேலாளர், மேற்பார்வையாளர்களிடம், விசாரணை செய்து வருகின்றனர். இதே போல மிடாஸ் மதுபான ஆலைக்கு அட்டைப்பெட்டிகள் வினியோகம் செய்யும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், ஸ்ரீசாய் கார்டன்ஸ் நிறுவனங்களில் 2–வது நாளாக சோதனைகள் தொடர்ந்தது.

அங்குள்ள அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடக்கிறது. தொடர்ந்து 3–வது நாளாக நடைபெற்ற சோதனையில் முக்கிய பண பரிவர்த்தனைக்கு உரிய ஆவணங்கள், டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபான வினியாகம் குறித்த ஆவணங்கள் உள்பட ஏராளமான முக்கிய ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்