புதுச்சேரி நகைக் கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படுவது ஏன்? பரபரப்பு தகவல்கள்

புதுச்சேரியில் உள்ள நகைக்கடைகளில் 3–வது நாளாக 50 வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து இங்கு சோதனை நடத்தப்படுவது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

Update: 2017-11-12 00:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி என்ற பெயரில் தங்கம் மற்றும் வெள்ளி நகைக் கடைகள் தனித்தனியாக இயங்கி வருகின்றன. அங்கேயே வெளிநாட்டு பணம் மாற்றும் (மணி எக்சேஞ்ச்) அலுவலகமும் இந்த நிறுவனத்தால் தனியாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 16–ந் தேதி காலை 7 மணியளவில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி நகைக்கடைகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் கார்களில் வந்து இறங்கினர். அங்கு அவர்கள் 3 பிரிவுகளாக பிரிந்து தங்கம், வெள்ளி நகைக்கடைகள் மற்றும் வெளிநாட்டு பணம் மாற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் 2–வது நாளாக அங்கு சோதனை நடந்தது. 10–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிறுவனத்தால் நடத்தப்பட்ட விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே மஞ்சக்குப்பத்தில் உள்ள ஓசன் ஸ்பிரே என்ற நட்சத்திர ஓட்டலிலும், நகைக்கடை மேலாளர் தென்னரசு என்பவரது வீட்டிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று 3–வது நாளாக இந்த அதிரடி சோதனை நடந்தது. புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி நகைக்கடைகள், பணம் மாற்றும் அலுவலகம் மற்றும் மஞ்சக்குப்பம் நட்சத்திர ஓட்டலில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதற்காக 10 கார்களில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து இருந்தனர். பல குழுக்களாக பிரிந்து அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக்கியமான தஸ்தாவேஜுகள், ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

கடை உரிமையாளர் மற்றும் முக்கியமான அலுவலர்களை நகைக்கடைக்கு அழைத்து வருமான வரி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வந்தநிலையில் மதியத்துக்குப் பின் மேலும் 20 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். மொத்தம் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த நகைக்கடைகள், பணம் மாற்றும் அலுவலகம், நட்சத்திர ஓட்டல் ஆகிய இடங்களில் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு இந்த சோதனை நீடித்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி நகைக்கடைகள் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு சசிகலா தரப்பினர் பணத்தை மாற்றியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே போதுமான வருமானம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இந்த நகைக்கடைக்கு திடீரென்று கோடிக்கணக்கில் பணம் வந்தது எப்படி? என்ற கேள்வி எழுந்ததால் இந்த அதிரடி சோதனையில் வருமானவரித் துறை அதிகாரிகள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு, புதுச்சேரியில் சசிகலா, தினகரன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வீடுகள், நிறுவனங்களை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் போது ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி நகைக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டதற்கு சசிகலா குடும்பத்தினரின் தொடர்பு இருந்து இருக்க வேண்டும். அதன் காரணமாகவே இந்த சோதனை நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்