தாறுமாறாக ஓடிய ஸ்கூட்டர் மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது பானிபூரி வியாபாரி – நண்பர் பலி

ஹலகூர் அருகே தாறுமாறாக ஓடிய ஸ்கூட்டர் மேம்பால தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பானிபூரி வியாபாரி தனது நண்பருடன் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

Update: 2017-11-11 21:30 GMT

ஹலகூர்,

ஹலகூர் அருகே தாறுமாறாக ஓடிய ஸ்கூட்டர் மேம்பால தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பானிபூரி வியாபாரி தனது நண்பருடன் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

பானிபூரி வியாபாரி

மண்டியா மாவட்டம் ஹலகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பிரதாப்(வயது 24). இவர் சொந்தமாக பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிரதாப், பானசமுத்திரா கிராமத்தில் வசித்து வரும் தனது நண்பன் சசிகுமார்(22) என்பவரை பார்க்கச் சென்றார். இரவு வரை அங்கேயே இருந்தார்.

பின்னர் இரவில் பிரதாப்பை ஹலகூரில் வந்து விட்டுச் செல்வதற்காக அவரை சசிகுமார் ஸ்கூட்டரில் அழைத்து வந்தார். ஸ்கூட்டரை சசிகுமார் ஓட்டினார். இருவரும் ஹலகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தனகனஹள்ளி கிராமம் அருகே ஒரு மேம்பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் தாறுமாறாக ஓடி மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது.

2 பேர் பலி

இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரதாப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சசிகுமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக மலவள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சசிகுமாரும் பலியானார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து ஹலகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்–இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரதாப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மலவள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சசிகுமாரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து ஹலகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் வாலிபர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்