நாகர்கோவிலில் பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி குளத்துக்குள் பாய்ந்தது; விவசாயி பலி

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி குளத்துக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-11-11 23:15 GMT
நாகர்கோவில்,

தாழக்குடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50), விவசாயி. இவருடைய மனைவி அனிதா. இவர்கள் 2 பேரும் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். தேரேகால்புதூர் அருகேயுள்ள சடையன்குளம் பகுதியில் வந்தபோது திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை மாவட்டம் நோக்கி சென்ற ஒரு சொகுசு கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளும், காரும் அருகே இருந்த குளத்துக்குள் பாய்ந்தன. இந்த விபத்தில் நடராஜனும், அவருடைய மனைவி அனிதாவும் படுகாயம் அடைந்தனர். மேலும், கார் டிரைவர் வடக்கன்குளத்தை சேர்ந்த அசோக் (28) என்பவரும் படுகாயம் அடைந்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கணவன்–மனைவி 2 பேரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர். அசோக்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில் நடராஜனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டது. அனிதா மற்றும் அசோக்குக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக நாகர்கோவில்–நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். அதன் பிறகு குளத்தில் பாய்ந்திருந்த காரை ராட்சத எந்திரம் (கிரேன்) மூலம் வெளியே கொண்டு வரும் பணி நடந்தது.

இந்த சம்பவம் பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜாண் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்