தேனி: ஆட்டோ மோதி தம்பதி உள்பட 7 பேர் காயம்

தேனி அருகே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு சென்று திரும்பியவர்கள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் தம்பதி உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2017-11-11 08:22 GMT
தேனி,

தேனியில் நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் பிச்சைமணி (வயது 55) தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு வேனில் தேனிக்கு வந்தனர்.விழா முடிந்தபிறகு அதே வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். வீரபாண்டியில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் சாலையோரம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அசுர வேகத்தில் வந்த ஆட்டோ, சாப்பிட்டுக் கொண்டு இருந்த கூட்டத்துக்குள் புகுந்தது.

இதில் பிச்சைமணி, அவருடைய மனைவி ஈஸ்வரி, மார்க்கையன்கோட்டையை சேர்ந்த ராமர் மனைவி சின்னதாய், கருணன் மனைவி ராமுத்தாய், அழகர் மகன் பிரனிஸ், அழகர்சாமி மனைவி திவ்யா, சடையாண்டி மனைவி அமராவதி ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து பிச்சைமணி கொடுத்த புகாரின் பேரில், ஆட்டோ டிரைவரான பழனிசெட்டிபட்டியை சேர்ந்த வேல்முருகன் மகன் ராஜபாண்டி மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்றார். விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கும்படி மருத்துவமனை முதல்வர் டாக்டர் திருநாவுக்கரசுக்கு உத்தரவிட்டார். அவருடன், முன்னாள் எம்.பி சையதுகான், மாவட்ட துணை செயலாளர் முருக்கோடைராமர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்று இருந்தனர்.

மேலும் செய்திகள்