டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2 விடுதி உரிமையாளர்களுக்கு அபராதம்

மேல்மலையனூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2 விடுதி உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-11-11 08:09 GMT
மேல்மலையனூர்,

மேல்மலையனூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை நேற்று கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் மண்டபத்துக்கு பின்புறம் உள்ள நடமாடும் கழிவறைகளை பார்வையிட்டார். அப்போது அங்கு தண்ணீர் தேங்கி கிடந்தது தெரிந்தது. உடனே அதனை அகற்றுமாறு இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாசிடம் தெரிவித்தார். பின்னர் மேல்மலையனூரில் உள்ள 2 தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கிடந்த டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள் ஆகியவற்றில் தேங்கி இருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த 2 தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். தொடர்ந்து திருமண மண்டபம் உள்பட பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திட்ட அலுவலர் மகேந்திரன், மக்கள் செய்தி தொடர்பாளர் சிவகுரு, தாசில்தார் மணிகண்டன், மண்டல துணை தாசில்தார் ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சொக்கநாதன், வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்