தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான ‘ஓட்டலை ஏலத்தில் எடுத்து கழிவறை கட்டுவேன்’ இந்து மகாசபை தலைவர் பேட்டி

தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான ஓட்டலை ஏலத்தில் எடுத்து கழிவறை கட்டுவேன் என்று அகில பாரத இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-10 22:44 GMT

மும்பை,

தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான ஓட்டலை ஏலத்தில் எடுத்து கழிவறை கட்டுவேன் என்று அகில பாரத இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராகிம்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை பெண்டி பஜாரில் அவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இதனை கையகப்படுத்திய மத்திய அரசு, வருகிற 14–ந் தேதி ஏலம் விடுகிறது.

இதனை ஏலத்தில் எடுப்பதற்காக அகில பாரத இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்ரபாணி மும்பையில் முகாமிட்டுள்ளார். இதையொட்டி, நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தேவேந்திர பட்னாவிசை அழைப்பேன்

தாவூத் இப்ராகிமின் ஓட்டலை ஏலத்தில் எடுத்ததும், அதில் நவீன வசதிகளுடன் கழிவறை கட்டுவேன். அதனை இலவசமாக பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். நிழல் உலக தாதாவுக்கு சொந்தமான சொத்தை கழிவறையாக மாற்றி, ‘பயங்கரவாதம் எப்படி முடிகிறது பாருங்கள்’ என்ற செய்தியை உலகுக்கு உணர்த்துவேன்.

கழிவறை கட்டி முடிக்கப்பட்டதும், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை அழைத்து, தூய்மை பாரத திட்டத்தின்கீழ், அதனை திறந்துவைக்க ஏற்பாடு செய்வேன்.

இவ்வாறு சுவாமி சக்ரபாணி தெரிவித்தார்.

ஏற்கனவே, கடந்த 2015–ம் ஆண்டு தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான கார் ஏலம் விடப்பட்ட போது, அதனை சுவாமி சக்ரபாணி ரூ.32 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்து, டெல்லிக்கு அருகாமையில் நடுரோட்டில் வைத்து அந்த காரை எரித்து கரிக்கட்டையாக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்