பட்டா பெயர் மாற்றத்துக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

ராணிப்பேட்டையில் பட்டா பெயர் மாற்றத்துக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-10 22:45 GMT

சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூர் மாவட்டம் லத்தேரியை அடுத்த காளாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 42). இவர் ராணிப்பேட்டை அருகே உள்ள நரசிங்கபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார்.

ராணிப்பேட்டை அருகே அக்ராவரம் மலைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (27). இவர் நிலத்தின் பட்டாவை தனது பெயரில் மாற்றுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவனை அணுகினார்.

அப்போது அவர், பட்டா பெயர் மாற்றுவதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று மணிவண்ணனிடம் கூறினார். பின்னர் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தருவதற்கு மணிவண்ணன் ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிவண்ணன், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மணிவண்ணிடம் கொடுத்து அனுப்பினர்.

நேற்று காலை நரசிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இளங்கோவனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மணிவண்ணன் கொடுத்தார்.

அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அலுவலகத்தில் வைத்தே, கிராம நிர்வாக அலுவலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

மேலும் செய்திகள்