புவனகிரியில் துணிகர சம்பவம்: வியாபாரி வீட்டில் ரூ.12¼ லட்சம் நகைகள் கொள்ளை
புவனகிரியில் வியாபாரி வீட்டில் ரூ.12¼ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புவனகிரி,
கடலூர் மாவட்டம் புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தமிழரசி (வயது 50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணியன் புவனகிரி கடைவீதியில் செருப்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சுப்பிரமணியனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு துணையாக தமிழரசி, மருத்துவமனையிலேயே தங்கி கவனித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சுப்பிரமணியன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி தமிழரசிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தமிழரசி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார்.
அப்போது வீட்டில் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணி மணிகள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தமிழரசி புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சுப்பிரமணியன் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.12¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்த படி, பெருமாத்தூர் கிராமம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியன் வீட்டில் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.