பாசன வாய்க்காலை தூர்வாரவில்லை என்று கூறி அமைச்சரின் காரை வழிமறித்து விவசாயிகள் முற்றுகை
பாசன வாய்க்காலை தூர்வாரவில்லை என்று கூறி அமைச்சரின் காரை வழிமறித்து விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் நேற்று வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர் எம்.சி.சம்பத் தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த ராயநல்லூர் விவசாயி ரவிபிரகாஷ் என்பவர் தங்கள் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால் கடந்த 8 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது.
இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறி கோரிக்கை மனு ஒன்றை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் அளித்தார். மனுவை பெற்ற அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பதில் ரவிபிரகாசுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் ராயநல்லூர் பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து அமைச்சரின் காரை வழிமறித்து முற்றுகையிட்டார்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் ராதா மதகு பாசன விவசாயிகள், ராயநல்லூர் விவசாயிகளிடம் எங்கள் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலும் தூர்வாராமல் கிடக்கிறது. இங்கு வந்து தேவையற்ற பிரச்சினைகளை செய்யாதீர்கள் என்று தெரிவித்தனர். இதனால் இரு பகுதி விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர் விவசாயிகள் அவர்களுக்குள்ளே சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.