அணைக்காடு பகுதியில் லாரியில் கொண்டு வந்த கழிவுநீரை திறந்து விட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் அணைக்காடு பகுதியில், மாநகராட்சி லாரியில் கொண்டு வந்த கழிவுநீரை திறந்த வெளியில் திறந்து விட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி அணைக்காடு என்.ஜி.ஆர்.காலனியில் 100–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் தேங்கும் கழிவுநீரை ஒரு தொட்டியில் சேகரித்து பின்னர், மோட்டார் மூலமாக உறிஞ்சி எடுத்து பாதாள சாக்கடை கால்வாயில் சேர்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியின் மின்மோட்டார் பழுதடைந்து விட்டது. இதனால் கழிவுநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் நேற்றுகாலை அங்கு சென்று லாரி மூலமாக கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீரை உறிஞ்சி எடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் என்.ஜி.ஆர்.காலனியில் நொய்யல் ஆற்றையொட்டி திறந்த வெளி கால்வாயில், மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் கொண்டு வந்த கழிப்பிட கழிவுநீரை திறந்து விட்டதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘திறந்த வெளியில் கழிப்பிட கழிவுநீரை கொட்டுவதால் எங்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து கேட்டால் துப்புரவு தொழிலாளர்கள் சரியான பதில் தெரிவிக்க மறுக்கிறார்கள் என்றனர். ஆனால் அங்கிருந்த மாநகராட்சி துப்புரவு அதிகாரிகள் கூறும்போது, ‘கழிப்பிட கழிவுநீர் எதுவும் கொட்டப்படவில்லை. வேறு இடத்தில் சாக்கடை நீரை உறிஞ்சி எடுத்து வந்து இங்கு திறந்து விடப்பட்டது’ என்றனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.