சத்துணவு அமைப்பாளர் வேலை கிடைக்காததால் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

சத்துணவு அமைப்பாளர் வேலை கிடைக்காததால் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-11-10 23:00 GMT

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுல்தானியா தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ரஹிமுன்னிஷா (வயது 26). இவர்களுக்கு 3 வயதில் கத்திஜா என்ற பெண் குழந்தை உள்ளது. ரஹிமுன்னிஷா சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற நேர்காணலிலும் அவர் கலந்துகொண்டார்.

தற்போது தகுதியானவர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் ரஹிமுன்னிஷாவுக்கு பணியில் சேருவதற்கான அழைப்பு கடிதம் வரவில்லை. இதனால் ரஹிமுன்னிஷா தாராபுரம் நகராட்சி அலுவலகம் சென்று, அதிகாரிகளை சந்தித்து அழைப்பு கடிதம் வராதது குறித்து விவரம் கேட்டுள்ளார்.

அதற்கு அதிகாரிகள், கலெக்டர் அலுவலகம் சென்று விசாரிக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு ரஹிமுன்னிஷா சென்று விவரம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், ரஹிமுன்னிஷாவிடம் ‘‘ கலப்பு திருமணம் செய்ததற்கான விவரங்களை நகராட்சி அதிகாரிகள் குறிப்பிடவில்லை என்றும் அதற்கான காரணத்தை நகராட்சி அலுவலகத்தில் விசாரித்துப்பாருங்கள்’’ என்றும் கூறியுள்ளனர்.

அதன் பிறகு ரஹிமுன்னிஷா நகராட்சி அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது அதிகாரிகள் உரிய பதிலை அளிக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த ரஹிமுன்னிசா தனது குழந்தையுடன் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து, வேலை கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது பற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் ரஹிமுன்னிஷாவிடம் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் காமராஜியும், நகராட்சி மேலாளர் முத்துக்குமாரும், ரஹிமுன்னிஷாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரஹிமுன்னிஷா நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். பின்னர் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் அருகே வந்ததும் ரஹிமுன்னிஷா திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதை பார்த்த போலீசார் ஓடிச்சென்று ரஹிமுன்னிஷா மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினார்கள்.

இந்த சம்பவம் குறித்து ரஹிமுன்னிஷா கூறியதாவது:–

ராஜாவும், நானும் கலப்பு திருமணம் செய்துகொண்டோம். எனது கணவருக்கு சரியான வேலையில்லை. கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அனைத்து ஆவணங்களோடு சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்முக தேர்வு நடந்து முடிந்த பிறகு, நகராட்சி அதிகாரிகள் அ.தி.மு.க. நகர செயலாளர் காமராஜை பார்த்தால் தான் வேலை கிடைக்கும் என்று கூறிவிட்டார்கள். நான் காமராஜை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வேலை வாங்கித்தரும்படி கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் ரூ.1½ லட்சம் கொடுத்தால் தான் வேலை கிடைக்கும்’’ என்று கூறினார்.

என்னிடம் பணம் இல்லாததால் ரூ.50 ஆயிரத்தை கடன் வாங்கி அவரிடம் கொடுத்தேன். அவர் அதை வாங்கிக்கொண்டு இந்த பணத்தை முன்பணமாக வைத்துக்கொள்கிறேன். ஒரு வாரத்தில் மீதி பணத்தை கொடுத்துவிடு என்று கூறினார். ஆனால் என்னால் மீதிப்பணத்தை தரமுடியவில்லை.

அதன் பிறகு காமராஜ் தினமும் எனக்கு போன் செய்து பணம் ரெடியா? என்று கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். என்னால் அதற்கு மேல் பணம் தரமுடியாது என்று சொன்னவுடன் என்னிடம் வாங்கிய ரூ.50 ஆயிரத்தை திருப்பித்தந்துவிட்டு உனக்கு வேலை இல்லை’’ என்று கூறிவிட்டார். கேட்ட பணத்தை என்னால் தரமுடியாததால் எனது ஆவணங்களை மறைத்து எனக்கு வேலை கிடைக்காதபடி செய்து விட்டார்கள். இதற்கு நியாயம் கேட்டு போராடியதற்கு என்னை தரக்குறைவாக பேசி மிரட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலை கிடைக்காத விரக்தியில் நகராட்சி அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்