தன்னுடைய நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றதாக கூறி பஸ் டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தன்னுடைய நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றதாக கூறி தனியார் நிறுவனம் முன் பஸ் டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-11-10 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு பஸ் நிலையம் அருகே நிலங்களை வாங்கி விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் நிலங்கள் வாங்கி உள்ளனர். இந்த நிறுவனத்தினர் விற்ற நிலத்தை மேலும் பலருக்கு விற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிபட்டியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் அன்புமணி (வயது 42) என்பவர் ரூ.4½ லட்சம் கொடுத்து 5½ சென்ட் நிலம் வாங்கி இருந்தார். ஆனால் அந்த இடத்துக்கு பட்டா கொடுக்காமல் ரசீது மட்டும் கொடுத்துள்ளனர்.

தற்போது இவருக்கு விற்ற இடத்தை சிவகிரியை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்புமணி நேற்று காலை தன்னுடன் 5 பேரை அழைத்துக்கொண்டு ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள அந்த தனியார் நிறுவனத்துக்கு வந்தார். அப்போது அவர் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை திடீரென எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு நின்றிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து அன்புமணி கூறும்போது, ‘எனக்கு விற்ற இடத்தை வேறு ஒருவருக்கு விற்று மோசடி செய்து விட்டனர். நான் வாங்கிய இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும். அல்லது நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கவேண்டும். இப்போது என்னை பொதுமக்கள் காப்பாற்றி விட்டனர். எனக்கு பட்டா வழங்கவில்லை என்றால் நான் கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்வேன்’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அன்புமணியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்