நெல்லையில் பரிதாபம்: வீட்டு சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி

நெல்லையில், வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-11-10 21:00 GMT

நெல்லை,

நெல்லையில், வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மழையால் வீடு சேதம்

நெல்லை மேலப்பாளையம் ஆண்டவர் தெருவை சேர்ந்தவர் அபுபக்கர். இவருக்கு ஆமீன்புரம் 5–வது தெருவில் சொந்தவீடு உள்ளது. இந்த வீடு கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் இந்த வீடு சேதம் அடைந்தது. இதனால் அந்த வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்ட அபுபக்கர் முடிவு செய்தார்.

இதனையடுத்து சேதமடைந்த அந்த வீட்டை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. மேலப்பாளையம் ஆமீன்புரம் 7–வது தெருவை சேர்ந்த கோதர்மைதீன்(வயது 21), இந்த பணியில் ஈடுபட்டு வந்தார். அவர், வீட்டின் மீது ஏறி நின்று எந்திரம் மூலம் சுவரை உடைத்துக் கொண்டு இருந்தார்.

சுவர் இடிந்து வாலிபர் பலி

அப்போது சுவர் இடிந்ததால் மேலே நின்ற கோதர்மைதீன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது சுவர் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த கோதர்மைதீன் சில வினாடிகளில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த மேலப்பாளையம் போலீசார் கோதர் மைதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்