போலீஸ் அதிகாரி வீட்டிற்கு சென்று தகராறு: ஐ.ஆர்.பி. காவலர், மனைவி மீது வழக்கு

புதுச்சேரி ஐ.ஆர்.பி. காவலர் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2017-11-09 22:27 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி ஐ.ஆர்.பி. காவலராக விஜயகுமார் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததை தொடர்ந்து விஜயகுமாரின் பணி நேரத்தை ஐ.ஆர்.பி. இன்ஸ்பெக்டர் தமிழ் வாணன் மாற்றி உத்தரவிட்டார். இது விஜயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே அவர் தனது மனைவியுடன் லாஸ்பேட்டை அசோக் நகர் பாரதியார் வீதியில் உள்ள இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் இருந்த தமிழ்வாணனின் மாமனார் முனுசாமியிடம் (65), எப்படி பணி நேரத்தை மாற்றி உத்தரவிடலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது வெளியில் சென்று விட்டு அங்கு வந்த தமிழ்வாணன் இதுகுறித்து விஜயகுமாரை தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக கோரிமேடு போலீசில் முனுசாமி அளித்த புகாரின்பேரில் விஜயகுமார், அவருடைய மனைவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக ஐ.ஆர்.பி. காவலர் விஜயகுமார், அவரின் மனைவி பீரித்தி ஆகியோர் கூறுகையில், ‘தாங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வீட்டிற்கு நியாயம் கேட்க தான் சென்றோம். அங்கிருந்தவர்கள் தான் எனது கணவரை தாக்கினார்கள். எங்கள் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி விளக்குவதற்காகத் தான் போலீஸ் டி.ஜி.பி., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு சென்றோம். ஆனால் அவர்களை சந்திக்க முடியவில்லை.’ என்றனர். 

மேலும் செய்திகள்