அகோலாவில் டிசம்பர் 1–ந் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்பு பற்றி யஷ்வந்த் சின்கா பேசுகிறார்

அகோலாவில் டிசம்பர் 1–ந் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்பு குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா பேசுகிறார் என்று நானா படோலே எம்.பி. தெரிவித்தார்.

Update: 2017-11-09 21:59 GMT

நாக்பூர்,

பாரதீய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய மந்திரிசபையில் நிதி மந்திரியாகவும் பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்கா. ஏற்கனவே நாட்டின் பொருளாதார நிலை குறித்து இவர் வெளியிட்ட கட்டுரையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால், பா.ஜனதா வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில், 80 வயது யஷ்வந்த் சின்கா, டிசம்பர் 1–ந் தேதி அகோலாவில் நடைபெறுகிற விவசாயிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேச இருப்பதாக பா.ஜனதா எம்.பி. நானா படோலே தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் நாக்பூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. நடைமுறை ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அகோலாவில் நடைபெறுகின்ற விவசாயிகளின் மாநாட்டில், யஷ்வந்த் சின்காவும், சத்ருகன் சின்கா எம்.பி.யும் பங்கேற்று பேசுகின்றனர். விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசினேன்.

காங்கிரசிலும், சிவசேனாவிலும் சேருமாறு எனக்கு அழைப்பு வருகிறது. சாமானிய மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி நான் பேசுவதை பா.ஜனதாவால் தடுக்க முடியாது. நான் இவ்வாறு பேசுவது கட்சி மேலிடத்துக்கு பிடிக்கவில்லை என்றால், என்னிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கட்டும். அதன்பின்னர், என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வேன்.

இவ்வாறு நானே படோலே எம்.பி. தெரிவித்தார்.

மேலும் செய்திகள்