மாங்காட்டில் மழை விட்டும் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் வீடுகள்
மாங்காட்டில் மழை விட்டும் வீடுகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
பூந்தமல்லி,
கடந்த ஒரு வாரமாக கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கியதால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மழை விட்டதால் பெரும்பாலான இடங்களில் தேங்கி உள்ள தண்ணீர் மெல்ல வடிய தொடங்கி உள்ளது.
மேலும் சில இடங்களில் மழைநீர் வடிந்து விட்டது. ஆனால் மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஜனனி நகர் பகுதியில் மழை விட்டும் தண்ணீர் வடியாமல் வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-
இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இந்த வேதனையை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இங்கு தேங்கும் மழை நீர் இடுப்பளவு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்ல வேண்டும் என்றால் நாங்கள் தெர்மாகோல் மூலம் வெளியே செல்கிறோம். ஆனால் அதில் செல்லும்போது தவறி தண்ணீரில் விழுந்து விடுவோம் என்பதற்காக அதை பயன்படுத்த கூடாது. தேங்கி உள்ள தண்ணீரில் நடந்து செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டு செல்கின்றனர்.
அல்லி பூக்கள்
இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். அதுமட்டுமின்றி தேங்கி உள்ள மழைநீரில் அதிக இடங்களில் அல்லி பூக்கள் பூத்து உள்ளன. இதனால் இந்த இடம் கோவில் குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் இந்த தண்ணீர் வடிய 4 மாதத்திற்கு மேல் ஆகும். அதுவரை நாங்கள் இந்த இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் சில இடங்களில் மட்டும் மண் கொட்டி மேடாக்கி உள்ளனர்.
ஆனால் இந்த பகுதி முழுவதும் சீரமைக்கப்படவில்லை. எனவே இனி வரும் காலங்களில் இந்த பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.