அரக்கோணம் தொகுதியில் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி

அரக்கோணம் அருகே சம்பத்ராயன்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.

Update: 2017-11-09 22:00 GMT

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே சம்பத்ராயன்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் பி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஜி.விஜயன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் என்.விஜயராஜன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 53 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி பேசினார். விழாவில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஏ.கணேசன், சேகர், பழனி, ஏ.எல்.நாகராஜன், ஆர்.ஸ்ரீதர், என்.சங்கர், செந்தில்மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சேந்தமங்கலம் பள்ளியில் நடந்த விழாவுக்கு பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் எஸ்.ரவிக்குமார் வரவேற்றார். 53 மாணவ, மாணவிகளுக்கு சு.ரவி எம்.எல்.ஏ. மடிக்கணினி வழங்கினார். எஸ்.சரவணன் நன்றி கூறினார்.

சயனபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 145 மாணவ, மாணவிகளுக்கும், நாகவேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 53 மாணவ, மாணவிகளுக்கும், மோசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 117 மாணவ, மாணவிகளுக்கும், அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 155 மாணவிகளுக்கும் சு.ரவி எம்.எல்.ஏ. விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்