பெங்களூருவில் காங். சார்பில் கருப்பு தின பொதுக்கூட்டம் பிரதமர் மீது சித்தராமையா கடும் தாக்கு
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நேற்று கருப்பு தின பொதுக் கூட்டம் நடந்தது.
பெங்களூரு,
இந்தியாவில் கடந்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் 8-ந்தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது.
கருப்பு தினம் அனுசரிப்பு
பணம் மதிப்பு நீக்கம் நேற்றுடன் ஒரு ஆண்டு ஆனதையொட்டி கர்நாடக காங்கிரஸ் சார்பில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் இருந்து ஊர்வலம் தொடங்கி சுதந்திர பூங்கா வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து அங்கு கருப்பு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மந்திரி ராமலிங்கரெட்டி, செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல்-மந்திரி சித்தராமையா, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களை கடுமையாக தாக்கி பேசினார். சித்தராமையா பேசும் போது கூறியதாவது:-
நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இன்று நாடு கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதற்கு பிரதமர் மோடி தான் காரணம். ரூபாய் நோட்டு ரத்தால் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் நன்றாக தூங்கினர். அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகள் யாரும் வங்கி முன் வந்து நிற்கவில்லை. ஏழைகள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் தான் வங்கி வாசலில் நின்றனர்.
பிரதமர் மோடி ஏழை மக்களுக்கு செய்த மிகப்பெரிய மோசடி ஆகும். மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் கிரிமினல் மனநிலை கொண்டவர்கள். அதனால் தான் அவர்கள் அதே போல் யோசிக்கிறார்கள். பா.ஜனதாவை கட்டமைத்த அத்வானியையே அவர்கள் ஓரங்கட்டிவிட்டனர். சித்தராமையா அரசு மிகப்பெரிய ஊழல் அரசு என்று அமித்ஷா கூறியுள்ளார்.
சட்டரீதியான கொள்ளை
எடியூரப்பா, அமித்ஷா இருவரும் சிறைக்கு சென்று வந்தவர்கள். மானம், மரியாதை இருந்தால் இவர்கள் 2 பேரும் வெளியில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடாது. எடியூரப்பா மேற்கொண்டுள்ள பயணத்திற்கு பணம், சேலை கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். இதை நான் கூறவில்லை. பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி சொகடு சிவண்ணாவே கூறி இருக்கிறார்.
எடியூரப்பாவுடன் ஷோபா மற்றும் புட்டசாமி ஆகியோர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் யாரும் அவரை ஆதரிக்கவில்லை. ரூபாய் நோட்டு ரத்து மிகப்பெரிய திட்டமிடப்பட்ட சட்டரீதியான கொள்ளை ஆகும். இதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மோடியும், அமித்ஷாவும் எத்தனை முறை கர்நாடகத்திற்கு வந்தாலும் எதுவும் நடக்காது. இது பசவண்ணர் வாழ்ந்த மண். மதவாதத்தை தூண்டி விடுபவர்களை கர்நாடக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
மக்கள் தயாராக இல்லை
எடியூரப்பாவின் மாற்றத்திற்கான பயண தொடக்க பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார். இதில் 3 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எடியூரப்பா கூறினார். ஆனால் அந்த கூட்டத்தில் போடப்பட்டு இருந்த நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தன. சில ஆயிரம் பேர் மட்டுமே அதில் கலந்து கொண்டனர். இதன் மூலம் பா.ஜனதாவை ஆதரிக்க மக்கள் தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிந்துள்ளது.
ஆர்.அசோக்கை கர்நாடக அரசு மிரட்டி கூட்டத்தை கூட்ட விடாமல் தடுத்துவிட்டது என்று சிலர் கூறுகிறார்கள். இது தவறானது. ஆர்.அசோக் சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஒதுக்கியது உண்மை தான். பள்ளிகளில் இலவச பால் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். ஆனால் எச்.டி.ரேவண்ணா மந்திரியாக இருந்தபோது அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று குமாரசாமி சொல்கிறார். இது பொய். நான் எனது அரசியல் வாழ்க்கையில் செய்யாத திட்டத்தை நான் செய்ததாக கூறியதே இல்லை.
மூளையே இல்லை
இங்கு ஈசுவரப்பா என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு மூளையே இல்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நல்ல நாட்கள் வரும் என்று மோடி கூறினார். அவர் பிரதமரான பிறகு மக்களுக்கு நல்ல நாட்கள் வரவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் மந்திரி டி.கே.சிவக்குமார் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது பா.ஜனதாவில் சேர்ந்துவிடுங்கள் என்று டி.கே.சிவக்குமாரிடம் அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். நாட்டில் எந்த அளவுக்கு காவிமயம் ஆக்கப்படுகிறது என்று மக்கள் பார்க்க வேண்டும்.
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.