திருவள்ளூர் மாவட்டத்தில் கொசுக்கள் உற்பத்தியாக காரணமானவர்களுக்கு ரூ.9 லட்சம் அபராதம் கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசுக்கள் உற்பத்தியாக காரணமானவர்களுக்கு இதுவரை ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நேற்று திருவள்ளூரை அடுத்த திருவூர் பகுதியில் டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் பொதுமக்களிடம் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கொசுக்கள் ஒழிப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் 98 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த 2 ஆயிரத்து 704 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது ஆஸ்பத்திரிக்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
14 போலி மருத்துவர்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 14 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி மருத்துவர்கள், ஏரிகள், குளங்களில் நீர் நிரம்புவது பற்றி மின்சார கம்பங்கள் சாய்தல், துண்டிக்கப்பட்ட மின்கம்பிகள் போன்ற அனைத்து புகார்களையும் அளிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம். புகார்கள் தொடர்பாக வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, மின்வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை போன்ற துறைகள் உடனுக்குடன் அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொண்டு உரிய நேரத்தில் தீர்வு காண்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள் டாக்டர் பிரபாகரன், கிருஷ்ணராஜ், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் உடன் இருந்தார்கள்.