புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் விரிசல்: விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி

தஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2017-11-08 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை, நபார்டு, கிராம சாலைகள் திட்டம் மூலம் ரூ.52 கோடி மதிப்பீட்டில் 568 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேற்கு பகுதியில் இறங்கும் இடத்தில் நாஞ்சிக்கோட்டை சாலை சந்திப்பும் சேருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த பாலம் கட்டப்படவில்லை என்றும் கூறி பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகும் போக்குவரத்துக்கு திறந்துவிடப்படவில்லை.

வருகிற 29-ந் தேதி தஞ்சையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த பாலத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் வண்டிக்காரத்தெருவில் பாலத்தின் கிழக்கு பகுதி இறக்கத்தில் போடப்பட்டுள்ள தார் சாலையில் 100 மீட்டர் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதை சரி செய்வதற் கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்றுமாலை தஞ்சைக்கு வந்த தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தஞ்சையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு சென்று அங்கு விரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சையில் புதிய மேம்பாலம் கட்ட தி.மு.க. ஆட்சியில் ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இந்த பணி தொடங்குவதற்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதால் இந்த பாலம் கட்டும் பணியை கிடப்பில் போட்டு இருந்தனர். அதற்கு பிறகு இந்த வட்டாரத்தில் இருந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் வேறுவழியின்றி பாலம் கட்ட அ.தி.மு.க. முடிவு செய்தது.

கூடுதலாக ரூ.10 கோடி ஒதுக்கி திட்ட மதிப்பீட்டை திருத்தி இந்த திட்டத்திற்கு ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்தபோது 870 மீட்டர் நீளத்திற்கு இந்த பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அதை 568 மீட்டராக குறைத்து, எந்த வரைபடத்தின் அடிப்படையில் கட்ட முடிவு செய்யப்பட்டிருந்ததோ, அந்த வரைபடத்தை மாற்றி முறையில்லாத வகையில் கட்டி முடித்துள்ளனர்.

தற்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. பாலம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவு செய்யப்பட்டிருக்கிறதா? முறையான ஒப்பந்ததாரரிடம் இந்த பணி கொடுக்கப்பட்டுள்ளதா? அல்லது வழக்கம்போல் எல்லாவற்றிலும் கமிஷன் பெறும் இந்த குதிரைபேர ஆட்சி, இந்த பாலப்பணியிலும் கமிஷன் பெற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. உடனே இது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அப்போது தான் உண்மை நிலை வெளியே வரும்.

பாலத்தை திறந்தாலும் விபத்து ஏற்படும் என்று கூறும் மக்களை பற்றி அரசு புரிந்து கொண்டு அதை சரி செய்ய வேண்டும். இந்த தவறு நடந்ததற்கு யார் காரணம்? என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணித்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் இதற்கு பொறுப்பு. அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, நகர செயலாளர் நீலமேகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் து.செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்