சிறுபாக்கம் அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

சிறுபாக்கம் அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-08 23:00 GMT

சிறுபாக்கம்,

சிறுபாக்கம் அருகே உள்ளது மங்களூர் ஊராட்சி. இங்குள்ள வாணியத்தெருவில் 100–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தெருக்களில் தேங்கிய மழைநீர் வழிந்தோடி வடிகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும், மழைநீர் வழிந்தோட வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், ரத்தினசாமி, மகாலிங்கம், உதயசூரியன், அன்பழகன், ஆகியோர் முன்னிலையில் நேற்று காலையில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணிநேரம் போராட்டம் நடைபெற்றும், பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து இதுகுறித்து முறையிடுவோம் எனக்கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்