பெருந்துறையில் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கட்டிட தொழிலாளியை கொல்ல முயற்சி

பெருந்துறையில் தலையில் கல்லை தூக்கிப்போட்ட கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-11-08 23:00 GMT

பெருந்துறை,

பெருந்துறை போலீஸ்நிலையம் அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டும் பணியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். விருதுநகர் மாவட்டம் கார்ஏந்தல் அருகே உள்ள திருச்சுழியை சேர்ந்த கருப்புராஜன் (வயது 22) என்ற கட்டிட தொழிலாளியும் இங்கு வேலை பார்த்து வருகிறார்.

தொழிலாளர்கள் அனைவரும் வேலை நடைபெறும் கட்டிடத்திலேயே தங்கிக்கொண்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கருப்புராஜனும் வேலை முடிந்து தரையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்.

நள்ளிரவு 12 மணி அளவில் யாரோ ஒரு மர்ம நபர் அங்கு வந்து தூங்கிக்கொண்டு இருந்த கருப்புராஜனின் தலையில் கல்லை தூக்கிப்போட்டுவிட்டு ஓடிவிட்டார். கல் தலைமுழுவதும் விழாமல் இடது காது ஓரமாக விழுந்தது. இதனால் இடது காதிலும், இடது பக்க தலையில் அடிபட்டு ரத்த வழிந்தது. வலியால் கதறி துடித்த கருப்புராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனபேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராம்பிரபு வழக்குப்பதிவு செய்து, கருப்புராஜன் தலைமீது கல்லை தூக்கிப்போட்டு கொல்ல முயன்றது யார்? எதற்காக இந்த கொலை முயற்சி நடந்தது? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்