பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணம் வைத்திருந்தவர்களுக்கு தான் உதவியது; கனிமொழி எம்.பி. பேச்சு
‘பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணம் வைத்திருந்தவர்களுக்கு தான் உதவியது’ என்று கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.
கோவை,
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க, சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை டாடாபாத்தில் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி பேசியதாவது:–
உடல்நலமில்லாமல் உள்ள கலைஞரை பார்க்க பிரதமர் நரேந்திரமோடி வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து விட்டு சென்றார். இதனால் பா.ஜனதாவை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமா? என்று அனைவரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வழியில் வந்த தி.மு.க. திட்டமிட்டவாறு பண நீக்க நடவடிக்கையை கருப்புதினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இதே தேதியில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், ரூ.5 லட்சம் கோடி கருப்பு பணம் இருக்கிறது என்றும், போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது என்றும் கூறினார். ஆனால் புழக்கத்தில் இருந்த 99 சதவீத ரூபாய் நோட்டுகளும் வங்கிக்கு வந்து விட்டன. அப்படியென்றால் கருப்பு பணம் இல்லை என்று தானே அர்த்தம்.
ஆனால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் மக்கள் நாள் கணக்கில் வங்கி மற்றும் ஏ.டி,எம். வாசல்களில் காத்திருந்தனர். இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.பண நீக்க நடவடிக்கையினால் நாடு முழுவதும் 100 பேருக்கு மேல் உயிரிழந்தனர். சாதாரண மக்களுக்கு ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கூட கிடைக்காத நிலையில் சேகர் ரெட்டியிடம் மட்டும் ரூ.9 ஆயிரம் கோடிக்கு இரண்டாயிரம் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுக்கு மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி கிடைத்தது? அப்படியென்றால் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் அதை வெள்ளையாக்கி விட்டார்களா? எனவே மோடி கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணம் வைத்திருந்தவர்களுக்குத் தான் உதவியதே தவிர ஏழை, நடுத்தர, தொழில் துறையினருக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
மோடி கொண்டு வந்த பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது. தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. உள்கட்சி பூசலை சமாளிப்பதற்கு தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறது. எப்போது இந்த ஆட்சி போகும் என்று மக்கள் கேட்கிறார்கள்.
விளம்பரத்துக்காக மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. அதனால் சாதாரண மக்களுக்கு எந்த பலனும் கிடையாது. எனவே இனியாவது மத்திய அரசு இந்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மக்களுக்கு எதிரான பா.ஜனதா ஆட்சியும், அதற்கு வால் பிடித்துக் கொண்டு மக்களுக்கு எதுவும் செய்யாத அ.தி.மு.க. அரசும் தூக்கி எறியப்படகூடிய நாள் வெகுதொலைவில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ‘பிரதமர் மோடி கலைஞரை பார்க்க வீட்டுக்கு வந்ததை, 2 ஜி தீர்ப்போடு இணைத்து பேசி கொச்சைப்படுத்த வேண்டாம். மோடி கலைஞரை மட்டுமே பார்க்க வந்தார்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் இரா.தமிழ்மணி, சி.ஆர்.ராமச்சந்திரன், தி.மு.க. உயர் மட்ட குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், தி.மு..க. சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிசாமி, சிங்கை ரவி, பொதுக்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுசந்தரம், பையா கவுண்டர்,திராவிட மணி, வெங்கடேஷ், வக்கீல் அருள்மொழி, கோட்டை அப்பாஸ், பூபாலன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி விவசாய அணி செயலாளர் கோபால்சாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், பிரேம், பிரிமியர் செல்வம் மற்றும் வடிவேல், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சாந்தகுமார், ரகுபதி, துரைசிங், அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மைய நிறுவன தலைவர் சி.எம்.ஸ்டீபன்ராஜ், கரோலின் விமலா ராணி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து கட்சி கொடிகளை ஏந்தி வந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். குழந்தைகள் விளையாடுவதற்காக அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தி.மு.க தொண்டர்கள் மாலையாகவும், கிரீடம் போன்றும் அணிந்து ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்தனர்.