சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் தோட்டனூத்து ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள அரசனம்பட்டி, புளியம்பட்டி, அன்னைநகர், அழகர்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் மின் மோட்டார்கள் பழுதுடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அவர்களிடம் பொதுமக்கள் மனு ஒன்றை கொடுத்தனர்.
இது குறித்து அந்த பகுதியினர் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் ஒரு மாதமாக தண்ணீர்வரவில்லை. இதனால் நாங்கள் விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுதொடர்பாக ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று புகார் செய்தோம். ஆனால், அதிகாரிகள் அதற்கு செவிசாய்க்கவில்லை. அதிலும், அன்னை நகர் பகுதியில் 6 மாத காலமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எங்கள் பகுதியினருக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதற்கிடையே, பொதுமக்கள் அளித்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.