கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பால் சாலையில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீர்

வேலூரில் நேற்று விட்டு விட்டு மழை பெய்த நிலையில் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Update: 2017-11-07 22:45 GMT
வேலூர்,

தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 5-ந் தேதி இரவு பெய்யத் தொடங்கிய மழை அடுத்தநாள் காலை வரையில் தொடர்ந்தது. இதனால் நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

பின்னர் பகலில் நின்ற மழை மீண்டும் இரவில் பெய்யத் தொடங்கியது. நேற்று அதிகாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. பின்னர் சிறிது நேரம் மழை பெய்தது. சிறிது நேரம் வெயில் அடித்தது. இதனால் எப்போது மழை பெய்யும், எப்போது வெயில் அடிக்கும் என்று தெரியாமல் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் பாதிப்பு

பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ- மாணவிகள், வெளியில் சென்றிருந்த பொதுமக்கள் பலர் மழையில் நனைந்தபடி சென்றனர். சில நேரம் பலத்த மழை பெய்தபோது ரோட்டோரத்தில் உள்ள கடைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மழை விட்டு விட்டு பெய்தாலும் சில நேரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ரோட்டிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

திருப்பதி தேவஸ்தானம் அருகில் ரோட்டில் சாக்கடை கலந்த மழைநீர் தேங்கியது. இதேபோல் கோட்டை முன்பு காந்திசிலையை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

ஆலங்காயம்- 16.8, வாணியம்பாடி- 8.5, வேலூர்- 6.7, காவேரிப்பாக்கம்- 6, சோளிங்கர்- 4, அரக்கோணம்- 3, வாலாஜா- 2, மேலாலத்தூர்- 1.2. 

மேலும் செய்திகள்