வீட்டின் மாடியில் கிரிக்கெட் விளையாடியபோது பரிதாபம்: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு

பூந்தமல்லி அருகே வீட்டின் மாடியில் கிரிக்கெட் விளையாடியபோது மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

Update: 2017-11-07 22:30 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரம், முத்துமாரி அம்மன் கோவில் தெருவில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் தனித்தனியே குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வருபவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முகமது மனோகர். லாரி டிரைவர். இவரது மகன் முகமது மிராஜ்(வயது 11) அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது நண்பன் முகமது வாசிம்(13) அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

கிரிக்கெட் விளையாடினார்கள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதிகாலையில் இருந்தே இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் பள்ளி விடுமுறையாக இருக்கலாம் என்று கருதிய முகமது மிராஜ், முகமது வாசிம் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை.

வீட்டின் மாடியில் கொட்டும் மழையில் இருவரும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டு மாடியின் பால்கனியில் பந்து விழுந்து விட்டது.

அதனை எப்படி எடுப்பது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். அந்த மாடி மீது மற்றொரு தளம் அமைக்க தூண்கள் பாதி கட்டிய நிலையில் அந்த இடத்தில் கம்பிகள் கிடந்தன.

மின்சாரம் தாக்கி சாவு

அதில் இருந்து நீளமான ஒரு கம்பியை எடுத்த இருவரும் பால்கனியில் விழுந்து கிடந்த பந்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். முகமது மிராஜ் கம்பியின் முன்பகுதியை பிடித்தபடியும், முகமது வாசிம் கம்பியின் பின்பகுதியை பிடித்து கொண்டும் இருந்தனர்.

அப்போது அந்த வழியே சென்ற உயர் அழுத்த மின்சார வயரின் மீது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி உரசியது. இதனால் இருவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் முகமது மிராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனான். பலத்த காயம் அடைந்த முகமது வாசிமுக்கு வலது கையின் ஒரு பகுதி துண்டாகி விழுந்தது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

தீவிர சிகிச்சை

பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த முகமது வாசிமை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முகமது மிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

இந்த பகுதிகளில் குடியிருப்பை ஒட்டி உயர் அழுத்த உயர் அழுத்த மின்சார வயர் தாழ்வாக சென்று கொண்டிருக்கிறது. அதனை மாற்ற வேண்டும் என்று மின்சார வாரியத்திடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தோம்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் தற்போது உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் நிதி உதவி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்