மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற தனியார் பஸ் சிறைபிடிப்பு

கரூரில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-11-07 22:45 GMT
கரூர்,

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது20). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். சீனிவாசன் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெங்கமேட்டில் இருந்து கரூர் டவுன் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது வெங்கமேடு பாலம் அருகே வந்த போது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இருந்து கரூர் நோக்கி வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் அவரது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பஸ்சை சர்ச் கார்னர் அருகே சிறைபிடித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் சீனிவாசனின் உறவினர்களும் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியார் பஸ் டிரைவர் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த கலைச்செல்வன் (35) என தெரியவந்தது. இதையடுத்து பஸ்சை போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு சென்று டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் நேற்று காலை அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்