தங்கநகை வாங்கியதில் முன்விரோதம் தொழில் அதிபர் மகனை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல், 6 என்ஜினீயரிங் மாணவர்கள் கைது

கோவையில் தொழில் அதிபர் மகனை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய தேனியை சேர்ந்தவர் உள்பட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-07 22:30 GMT

கோவை,

கோவை பீளமேடுபுதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். ரியல் எஸ்டேட் அதிபர். இவர் மொத்தமாக எண்ணெய் வியாபாரமும் செய்து வருகிறார். இவருடைய மகன் ஞான ஆனந்தன் (வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 3–ந் தேதியில் இருந்து ஞானஆனந்தனை காணவில்லை. அவரை, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மனோகரனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள், நாங்கள் தான் உங்கள் மகனை கடத்தி உள்ளோம். ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு உங்கள் மகனை அழைத்துச் செல்லுங்கள். பணம் கொடுக்காமல் போலீசுக்கு தகவல் தெரிவித்தால் மகனை கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன், பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜூக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார், மனோகரனுக்கு வந்த செல்போன் அழைப்பு மூலம் துப்பு துலக்கினார்கள்.

அப்போது மர்ம நபர்கள் பேசிய செல்போன் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருப்பதாக சிக்னல் காட்டியது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு பாழடைந்த கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடத்தின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு ஞான ஆனந்தன் வாய் மற்றும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 9 பேரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் விரைந்து செயல்பட்டு 6 பேரை மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஞானஆனந்தனுக்கு உடலில் ஆங்காங்கே காயம் இருந்தது. அவரை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து பிடிபட்ட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் மதுரையை சேர்ந்த ராஜமாணிக்கம் (21), மணிகண்டன் (20), தேனியை சேர்ந்த சுதாகர் (21), முருகானந்தம் (20), கோவில்பட்டியை சேர்ந்த கோகுல் (20), ஈரோட்டை சேர்ந்த அரவிந்த் (20) என்பதும், அவர்கள் 6 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது கடத்தல், பணம் கேட்டு மிரட்டல், துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:–

ஞானஆனந்தன் தனது நண்பருடன் சேர்ந்து அவ்வப்போது தங்க நகை விற்பனை செய்து வந்தார். இதனால் அவரிடம், ராஜமாணிக்கம், மணிகண்டன் ஆகியோர் தங்கம் கேட்டனர். அதற்கு அவர் தனது நண்பரிடம் வாங்கிக் கொள்ளுமாறு கூறி உள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேரும், ஞான ஆனந்தனின் நண்பரிடம் தங்க நகை வாங்கி உள்ளனர்.

ஆனால் அதுபோலி நகையாக இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஞானஆனந்தனிடம் சென்று தாங்கள் தங்கநகை வாங்க கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி தருமாறு அவர்கள் கேட்டனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஞான ஆனந்தனை கடத்தி, மலுமிச்சம்பட்டியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைத்து பணம் கேட்டு சித்ரவதை செய்துள்ளனர்.

மேலும் ஞான ஆனந்தனின் தந்தை தொழில் அதிபர் என்பதால், அவருடைய மகனை கடத்தி மிரட்டினால் பணம் கொடுத்துவிடுவார் என்று நினைத்து கடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேர் தலை மறைவாகிவிட்டனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்