கலெக்டரின் உத்தரவையும் மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி வியாபாரிகள் முற்றுகை

விழுப்புரத்தில் கலெக்டரின் உத்தரவையும் மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-11-07 23:00 GMT

விழுப்புரம்,

விழுப்புரம்– திருச்சி நெடுஞ்சாலை பெட்ரோல் நிலையம் அருகில் உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யும் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு மது குடிக்க வருபவர்களால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அருகில் கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது.

எனவே இந்த கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் முறையிட்டதன் அடிப்படையில் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றும்படியும், அதுவரை தற்காலிகமாக கடையை மூடுமாறும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் அந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த டாஸ்மாக் கடையை வழக்கம்போல் திறக்கும்படி டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து பகல் 12 மணிக்கு அந்த கடையை திறந்து மேற்பார்வையாளர், விற்பனையாளர் ஆகியோர் மது விற்பனையில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் 50–க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு மதியம் 2.30 மணியளவில் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு கோ‌ஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை உடனே மூடுமாறும், இல்லையெனில் எங்களது போராட்டம் தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து டாஸ்மாக் கடையை மூடுமாறு கடை ஊழியர்களிடம் போலீசார் கேட்டுக்கொண்டதன்பேரில் அவர்கள் மாலை 3 மணியளவில் கடையை மூடிவிட்டு அங்கிருந்து சென்றனர். அதன் பிறகு வியாபாரிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்த டாஸ்மாக் கடை இங்கு திறக்கப்பட்டதில் இருந்து கடந்த 2 மாத காலமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பலமுறை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் நேற்று முன்தினம் தற்காலிகமாக கடையை மூட அவர் நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் கலெக்டரின் உத்தரவையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையை நிரந்தரமாக மூட வேண்டும். இல்லையெனில் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்